பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கலந்துரையாடல்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1262 குடும்பங்களுக்குமான உலக உணவு திட்டத்தின் (WFP) உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பிலான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வேலைத்திட்டம் முன்னெடுப்பது தொடர்பில் உலக உணவு திட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கி வைத்தார்கள்.

இதில் உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம். அஸ்லம், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் யு.எல். தாசிம், தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். அஸாறுடீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.