பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை: நாமல்

அண்மைய சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்குவது தொடர்பில் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் அல்லது கிராம உத்தியோகத்தர்களுக்கு இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ எழுத்துப்பூர்வ அறிவித்தலும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கு விழாக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறது.

இது கொண்டாட்டங்களுக்கான நேரமல்ல மக்களுக்குத் தேவை காணி உறுதிப்பத்திரங்களும் நிலையான தீர்வுகளுமே” என அவர் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கூறும் விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களில் கூறப்படும் விடயங்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல கிராமங்களுக்குச் சென்று உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை எனவும், இதனால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடு திரும்புவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், பல குடும்பங்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களிலேயே இருப்பதாகவும், அரசாங்கம் விளம்பரங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.