
பாடசாலை விடுமுறையில் மாற்றம் : புதிய அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் 2025ஆம் கல்வி ஆண்டு நிறைவடையும் திகதி மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட திருத்த அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளின் 2025ஆம் கல்வி ஆண்டு டிசம்பர் 22 ஆம் திங்கட்கிழமை அன்று நிறைவடையும்.
இதன்படி, டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 வரை மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025ஆம் கல்வி ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையும். இந்த பாடசாலைகளுக்கு டிசம்பர் 27 முதல் 2026 ஜனவரி 4 வரை விடுமுறை வழங்கப்படும்.
இந்தநிலையில், 2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதற்கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஜனவரி 5ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணையானது ஏற்கனவே (2025.12.09 அன்று) வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 30/2025 இலக்கச் சுற்றுநிருபத்தின்படியே அமையும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
