பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப் போட்டிகள்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பாடசாலை மாணவர்களுக்கிடையில் கல்வி, தலைமைத்துவம், ஆளுமை விருத்தி, படைப்பாற்றல்கள், திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் விவாதப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் புண்ணியமூர்த்தி ஜீவிதா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்கும் பாடசாலைப் பிள்ளைகளின் அறிவு, திறன், தேர்ச்சியினை விருத்தி செய்யும் நோக்கத்துடன் ஈகுவாலிட்டி கிளப் செயற்பாடுகளில் பங்குபற்றி விவாதப் போட்டியில் வெல்லும் பாடசாலை அணிகளைத் தெரிவு செய்து பரிசளித்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லடி தனியார் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கிடையிலான இறுதி விவாதமாக ஸ்மார்ற் போன் பாவனை மூலம் நன்மையா தீமையா என்ற விவாதம் இடம்பெற்றது.
இதில் தரம் ஏழு பிரிவைச் சேர்ந்த ஏறாவூர்ப்பற்று, கோறளைப் பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பாடசாலை அணிகள் இறுதி விவாதப் போட்டியில் பங்குபற்றிய நிலையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பலாச்சோலை இளந்தளிர் ஈகுவாலிற்றி கிளப் அணி 76 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர் அணிக்கு பாடசாலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்காக ஒரு இலட்ச ரூபாய் பணப்பரிசும், மாணவர்களுக்கு, பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் ஈடுபாட்டுடன், பாடசாலையில் பொருத்தமான வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தி ஏனைய சிறார்களுக்கும் அவர்களது விவாதத் திறனை வெளிப்படுத்துவதுடன் அதன் மூலம் ஒரு தேர்ச்சிமிக்க, தன்னம்பிக்கையுடனான விவாத அணி உருவாவதுடன் அது பாடசாலைக்கும் சிறுவர் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதோடு ஒரு வாய்ப்பையும், முன்மாதிரியையும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்துவதனை மையமாகக் கொண்டது என்று நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இந்த மாணவர் விவாதப் போட்டித் திட்டத்தை வரவேற்று உரையாற்றினர்.
மாணவர் விவாதப் போட்டி நிகழ்வின் நடுவர் குழாமில் திறந்த பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர் ஏ. விக்கினேஸ்வரன், கல்குடா வலயக்கல்வி ஆசிரியர் பயிற்சி வளவாளர் ரீ. சுதாகரன், வம்மிவட்டவான் வித்தியாலய அதிபர் எஸ். இந்திரன் ஆகியோர் கடமையாற்றினர்.
நிகழ்வில் மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திட்ட உத்தியோகத்தர் புண்ணியமூர்த்தி ஜீவிதா, நிருவாக அலுவலர் கந்தன் நிர்மலா, சமூக ஒருங்கிணைப்பாளர்களான பி. முரளீதரன், குணராஜ் சிந்துஜா ஆகியோருட்பட, ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்