பாடசாலை நேர நீடிப்பால் எழும் பிரச்சினை!

பாடசாலை நேரத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை மீளப் பெறுவதற்கு நவம்பர் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிப்பதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடித்து பிற்பகல் 2 மணி வரை மாற்றியமைக்கும் இந்த முடிவை அரசாங்கம் மாற்றத் தவறினால், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி (2026) முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவுக்கு எதிராக, டிசம்பர் இரண்டாம் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் சாதகமான பதிலளிக்கத் தவறினால், இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவும் தயங்க மாட்டோம் எனக் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகப் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருவதாகவும், அவர்கள் குறித்த முடிவுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை டிசம்பர் 8 ஆம் திகதி (க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிந்து பாடசாலைகள் மீண்டும் திறக்கும் போது) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகும் அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லையெனில், தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தயங்க மாட்டோம்.

இருப்பினும், உயர்தரப் பரீட்சை கடமைகளில் எவ்விதத் தடையுமின்றி ஈடுபடுவோம்,” என்றும் அவர் உறுதியளித்தார்.