குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பாடசாலைகளுக்கு அருகிலுள்ள கடைகளில் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட ஜங்க் உணவுப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய விதிமுறைகளின் கீழ், பாடசாலைகளின் 50 மீற்றர் சுற்றளவில் இவ்வாறான உணவுப் பொருட்களின் விற்பனை மற்றும் விளம்பரங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கை குறிப்பாக மாணவர்களை இலக்காகக் கொண்டதாக இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் இதனை மேலும் கடுமையாக அமுல்படுத்தி வருகிறது. அங்கு பாடசாலைகளின் 50 மீற்றர் சுற்றளவில் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட உணவுகளை விற்பனை செய்வதற்கும், இலவசமாக வழங்குவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாடசாலைகளுக்கு அருகிலுள்ள கடை உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையால் தங்களது வருமானம் பாதிக்கப்படலாம் என கவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளனர்.










