
பாடசாலைகளில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை: மாணவர்கள் அச்சத்தில்
-பதுளை நிருபர்-
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பசறை தமிழ் தேசிய பாடசாலையின் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீருடன் கற்கள், குப்பைகள், தேவையற்ற கழிவுகள் என அனைத்தும் கட்டிட பகுதிகளின் வளாகத்தில் சென்று தேங்கி காணப்படுகின்றன. இதனால் சில வகுப்பறைகளினுள் கழிவுநீர் புகுந்துள்ளது. இதனால் பசறை தமிழ் தேசிய பாடசாலையின் தரம் 3,4,5 வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு நேற்று செவ்வாய் கிழமை விடுமுறை வழங்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
பசறை லுணுகலை வீதி புனரமைக்கப்பட்ட போது பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் சரியான முறையில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை எனவும் இதனாலேயே தண்ணீர் உட்புகுவதாகவும் இதுசம்பந்தமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வினை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
