1990களில் பிரபலமடைந்த “பேர்லி பிரீதிங் (Barely Breathing)” பாடலின் பாடகரும், டோனி விருது பெற்ற இசையமைப்பாளருமான டங்கன் ஷீக், தனது 56ஆவது வயதில் காலமானார். அவர் செப்டம்பர் 17ஆம் திகதி நியூயோர்க்கில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1996ஆம் ஆண்டு வெளியான “பேர்லி பிரீதிங் (Barely Breathing)” பாடல் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஷீக், அந்தப் பாடலுக்காக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்தப் பாடல் Billboard Hot 100 பட்டியலில் 55 வாரங்கள் இடம்பெற்றதுடன், அதிகபட்சமாக 16ஆவது இடத்தைப் பிடித்தது.
பின்னர் இசை நாடகத் துறையில் கவனம் செலுத்திய அவர், பாடலாசிரியர் ஸ்டீவன் சேட்டருடன் இணைந்து “ஸ்பிரிங் அவேக்கனிங் (Spring Awakening)” இசை நாடகத்துக்கு இசையமைத்தார். 2006ஆம் ஆண்டு பிராட்வேயில் அறிமுகமான இந்த இசை நாடகம் எட்டு டோனி விருதுகளை வென்றதுடன், சிறந்த இசை ஆல்பத்துக்கான கிராமி விருதையும் பெற்றது.
“அமெரிக்கன் சைக்கோ (American Psycho)”, “அலிஸ் பை ஹார்ட் (Alice by Heart)” உள்ளிட்ட பல இசை நாடகங்களுக்கும் ஷீக் இசையமைத்துள்ளார். அவரது இறுதி இசை ஆல்பமான “கிளாப்டிராப் (Claptrap)” 2022ஆம் ஆண்டு வெளியானது.
ஷீக்கின் தாயார் சுசான் ஷீக் தெரிவித்த தகவலின்படி, அவர் இதய செயலிழப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட இதயத் துடிப்பு நிறுத்தத்தால் உயிரிழந்தார். அவரது மனைவி நோரா அரிஃபினும், ஏழு வயது மகள் இனெஸும் அவரைத் தொடர்ந்து உள்ளனர்.










