ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் சந்தேகிக்கப்படும் தீவிரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சு கூறியுள்ளது.
எனினும், பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் உதவித் திட்டமும் குனாரில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உட்பட மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததையும் நான்கு பேர் காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அரசு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து முறையிட்டுள்ளது.










