ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் மூன்று மாதங்களாக நிலவி வந்த ஒப்பீட்டளவிலான அமைதிக்கு பின்னர் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள நுர்கல் மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றதாக அங்குள்ள தகவல் மற்றும் கலாசாரத் துறை அதிகாரி நஜிபுல்லா ஹனீஃப் தெரிவித்துள்ளார். அங்குள்ள ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்ததாக தலிபான் அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள பார்மல் மாவட்டத்திலும் இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஒரு கடையும் பயன்படுத்தப்படாத வீடொன்றும் சேதமடைந்ததாகவும், அந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக உத்தியோகபூர்வ பதில் அளிக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டிய செய்திகளில், ஆப்கானிஸ்தானில் செயல்படும்தாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களின் மறைவிடங்களை இலக்காகக் கொண்டு இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆப்கான் பிரதேசத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தானில் இடம்பெறும் ஆயுத வன்முறைகள் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை என்றும், ஆப்கான் நிலப்பரப்பு பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும் காபூல் தெரிவித்து வருகிறது.
இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொலிஸ் வளாகத் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளன. கோஹாட் பகுதியில் உள்ள பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை; TTP அமைப்பும் தங்களுக்கு தொடர்பில்லை என மறுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான எல்லை மோதல்களுக்குப் பின்னர் தொடர்ந்து பதற்றமான நிலையில் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக, சுமார் 2,600 கிலோமீற்றர் நீளமான டுராண்ட் எல்லைப் பகுதியும் காணப்படுகிறது. இந்த எல்லையை ஆப்கானிஸ்தான் நீண்டகாலமாக சர்வதேச எல்லையாக அங்கீகரிக்காத நிலையில், பாகிஸ்தான் அதனை தனது உத்தியோகபூர்வ எல்லையாகக் கருதுகிறது.
இதற்கு முன்னரும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜூன் மாதம் குனார், பாக்டிகா மற்றும் பாக்டியா மாகாணங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 28 பொதுமக்கள் உயிரிழந்து, 49 பேர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் உதவித் திட்டம் தெரிவித்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன. அந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்ட நடவடிக்கையாக விளக்கியிருந்தது.
தற்போதைய தாக்குதல்கள் மற்றும் எல்லைப் பகுதியில் பதிவாகும் மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன. அதேவேளை, உயிரிழந்தவர்கள் மற்றும் தாக்குதல்களின் இலக்குகள் தொடர்பான ஆப்கான் தரப்பின் தகவல்களுக்கும் பாகிஸ்தான் தரப்பில் வெளியாகும் தகவல்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதால், சம்பவத்தின் முழுமையான நிலவரம் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.










