பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடந்த ஜூலை 23 ஆம் திகதி மான்செஸ்டரில் உள்ள ஒரு இடத்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பானது என்று கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில், 24 வயதான ஹைதர் அலி தொடர்பான குற்றவியல் விசாரணை குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் ஜூலை 17 முதல் ஓகஸ்ட் 6 வரை நடைபெற்ற பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளது.

பெக்கன்ஹாம் மைதானத்தில் ஷாஹீன்ஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது ஹைதர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.