
பாகிஸ்தான் கடைசி ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சியில் தாமதம்
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி பிற்போடப்பட்டுள்ளது.
ரங்கிரி, தம்புள்ளையில் இன்று காலையிலிருந்து பிற்பகல் 4.30 மணிவரை காலநிலை சீராக இருந்த போதிலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக அடர்த்தியான மழை பெய்ததால் போட்டியை உரிய நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மாலை 6.45 மணியளவில் மழை விட்டபோதிலும் மழைத்துளி வீழ்ந்த வண்ணம் இருக்கிறது.
மைதானம் முழுவதும் விரிப்புகளால் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் விரிப்புகளின்மீது மழைநீர் தேங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.
மழை முழுமையாக ஓய்ந்தால் இரவு 8.30 மணிக்குப் பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதலாவது போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாவது போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.
