
பாகிஸ்தானில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை எரிபொருள் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
டீசல் விலை 54.9 சதவீதம் அதிகரித்து ஒரு லீட்டர் 520.35 பாகிஸ்தான் ரூபாயாகவும், பெட்ரோல் விலை 42.7 சதவீதம் அதிகரித்து ஒரு லீட்டர் 458.40 ரூபாயாகவும் உயரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்க-ஈரான் மோதல் தொடர்பான பதற்றங்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் தெரிவித்தார்.
அமெரிக்க-ஈரான் போருக்குப் பிறகு சர்வதேச சந்தை விலைகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால்,
விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது,என்று நிதி அமைச்சருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மத்திய கிழக்கு நெருக்கடிக்கு முன்னர், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லீட்டருக்கு சுமார் 255-260 ரூபாயாகவும், டீசல் விலை சுமார் 260-265 ரூபாயாகவும் இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை சுமார் 321 ரூபாயாகவும், டீசல் விலை சுமார் 336 ரூபாயாகவும் உயர்ந்தது.
சமீபத்திய திருத்தத்துடன், பெட்ரோல் தற்போது லீட்டருக்கு 458.40 ரூபாயாகவும், டீசல் 520.35 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இது மத்திய கிழக்கு நெருக்கடி தொடங்கியதிலிருந்து பெட்ரோல் விலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 76 சதவீத அதிகரிப்பையும், டீசல் விலையில் சுமார் 96 சதவீத அதிகரிப்பையும் குறிக்கிறது.
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைப் பெரிதும் நம்பியிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு வந்துள்ளது.
எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துவதுடன், பணவீக்கத்தையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
