பாகிஸ்தானில் கடும் குளிர்: 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200இற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடும் குளிர் காரணமாக பாடசாலைகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த பஞ்சாப் மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்நிலையில் இந்த தடை உத்தரவு ஜனவரி 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அம்மாகாணத்தில் 10 ஆயிரத்து 520 பேருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் உயிரிழந்த 220 குழந்தைகளும் 5 வயதிற்கும் குறைந்தவர்கள் என்பதுடன் லாகூரைச் சேர்ந்த 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.