
பளை பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே கலந்துரையாடல்
-கிளிநொச்சி நிருபர்-
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச 18 கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கும் பளை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரிக்கும் விஷேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை பளை பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கிராம அலுவலர்களால் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இதில் பளை பிரதேசத்தில் பல வருடங்களாகவே அதிகம் இடம்பெற்று வரும் மணல் கொள்ளையால் எமது பிரதேசம் பாரிய ஆபத்தை நோக்கி செல்வதாகவும், இது தொடர்பாக பொலிஸார் கூடிய கவனம் செலுத்துமாறும் கேட்டுகொண்டிருந்தனர்.
மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு தாமதமாவதாகவும் இதனால் பல பாரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
மற்றும் கிளாலி, கோவில் வயல், முகமாலை போன்ற இடங்களில் அதிகளவிலான மண்கொள்ளை இடம்பெறுவதாகவும், இதனால் கனரக வாகனங்கள் செல்வதனால் வீதிகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது எனவும், சிறு வயதினர் போதைக்கு அடிமையாவதாகவும், மற்றும் மழை காலத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
சுமார் ஒருமணி நேரமாக இடம்பெற்றிருந்த கலந்துரையாடலில் பளை பொலிஸாரினால் மக்களுக்கான சிறந்த சேவையை வழங்குவோம் எனவும், குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை விரைந்து விசாரிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.


