பல வீடுகளில் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட 28 வயது இளைஞர்!

கனடாவின் ஒஷாவா (Oshawa) நகரில் பல வீடுகளில் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாநிலத்தின் டர்ஹாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 4.20 மணியளவில் சிம்கோ வீதி தெற்கு (Simcoe Street South) மற்றும் ராயல் வீதி (Royal Street) பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், ஆனால் அங்கு இருந்த நாயால் பயந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதைத்தொடர்ந்து, அதே வீதியில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கு இருந்த வீட்டின் பெண் உரிமையாளரைத் தாக்கி அவரிடம் தவறாக நடந்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், குறித்த நபர் சிம்கோ மற்றும் ஃபேர்‌பேங்க்ஸ் (Fairbanks) பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து, அங்கு படுக்கையிலிருந்த மூதாட்டியிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைளை மேற்கொண்ட பொலிஸார், சில மணி நேரங்களில் சந்தேகநபரை கைது செய்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தகுற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் தகவல் அல்லது கண்காணிப்பு காட்சி உள்ளவர்கள் பொலிஸாருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.