பல தபால் நிலையங்களுக்கு பூட்டு

-நுவரெலியா நிருபர்-

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பூட்டுப்பட்டுள்ளதனை தொடர்ந்து தபால் சேவைகள் நாளை வியாழக்கிழமை மற்றும் நாளைமறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதனால் மலையகத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதே நேரம் மலையகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாததன் காரணமாக மூடப்பட்டிருந்த போதிலும் வாகனங்கள் தொடர்ந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டு பலர் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலையகத்தில் பொது போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றன.

இதனால் இன்று புதன்கிழமை காலை வேலைக்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் என பலரும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

பஸ் போக்குவரத்து குறைவடைந்ததனை தொடர்ந்த பெரும்பாலான பொது மக்கள் புகையிரதங்களை தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பயன்படுத்தி வருவதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் புகையிரத பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயத்துறைக்கும் பாரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

டீசல் தட்டுப்பாடு காரணமாக தங்களது உற்பத்திகள் சந்தை படுத்துவதில் பெரும் சிக்கல் நிலைகள் தோன்றியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அந்நியச் செலவாணியினை பெற்றுத்தரும் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது குறித்த கூடிய அக்கறை கொண்டு செயப்பட வேண்டும் இல்லாவிட்டால் பல்வேறு துறைகள் பாதிப்படைவது வெகு தொலைவில் இல்லை என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே நேரம், இரானுவத்தினரால், எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு டோக்கன்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.