பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாகையில் விஜய்யின் 2ஆம் கட்ட பிரசாரம் இன்று!

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து ஆரம்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக அவர் இன்று சனிக்கிழமை நாகையில் தனது 2ஆம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது நாகைக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, விஜய் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது. பயண வழிப்பாதை மற்றும் பிரசாரம் நடைபெற உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது.

பிற கட்சிகளின் அலுவலகங்கள் இருப்பின், அந்த இடங்களில் தங்கள் கட்சியின் தன்னார்வலர்களை நியமித்து பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டால், பொறுப்பேற்க வேண்டும்.

சிலைகள் இருக்கும் இடங்களில் ஏறக்கூடாது போன்ற 20 நிபந்தனைகளுடன் பிரசாரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நண்பகல் 12.25 மணி முதல் 1 மணி வரை 35 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து காரைக்கால் வழியாக வரும் விஜய்க்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.