பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை நீக்குவதற்கு தீர்மானம்!
கட்சியின் பலவீனமான தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஆராய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் முதல் முறையாக இந்த குழு கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தலின் போது சில அமைப்பாளர்களின் மோசமான செயல்திறன், அமைப்பு நடவடிக்கைகள் இல்லாமை மற்றும் வாக்குகள் குறைவதற்குப் பாதித்த பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், முறையான விசாரணைக்குப் பின்னர் முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
புதிய தொகுதி அமைப்பாளர்களாக கட்சியில் சேர ஏராளமானோர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் வெற்றிடமாகவுள்ள பல தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
