
பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பொறிமுறை
வினாத்தாள் கசிவை தடுக்க புதிய பொறிமுறையொன்று அமுல்படுத்தப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேர்வுத் தாள்கள் கசிவதைத் தடுக்க வினாத்தாள் வங்கியொன்று ஏற்படுத்தப்படும்.
இந்த வினாத்தாள் வங்கியை 2026ஆம் ஆண்டுக்குள் நிறுவ முடியும் என்றும், இதனால் பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய முறையின் கீழ் வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியை மனித ஈடுபாட்டிற்கு பதிலாக கணினி மூலம் மேற்கொள்வதன் மூலம் பரீட்சை வினாத் தாள்களை பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
தற்போது பரீட்சை வினாத்தாள்கள் கசிவு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், தனிநபர்கள் மீதான நம்பிக்கையின் காரணமாகவே இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த நிலைமை பரீட்சை முறை தொடர்பான பிரச்சினையல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளின்போது பரீட்சை வினாத்தாள்கள் கசிந்தமை அண்மைக்காலமாக பாரிய பிரச்சினையாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அந்த சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர தேவையான தொழில்நுட்பம் தற்போதுள்ளது. வினாத்தாள் வங்கி ஊடாக புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்