
பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத்தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைகளுக்கு ஏற்ற வலயக் கல்வி அலுவலகத்தின் தேர்வுப் பாடத்திற்குப் பொறுப்பான உதவி கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அஞ்சல் மூலம் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளின் பெயர்கள் மற்றும் பாடங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், உரிய இணையத்தளம் மூலம் திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த திருத்தங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
