பரிசோதனைகளில் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லை
தரமற்ற கலப்படம் உள்ள எரிபொருளை சிபெட்கோ நிறுவனம் விநியோகிப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி பரவி வருகின்றது.
இந்நிலையில், குறித்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் மாதிரிகள் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
குறித்த பிரச்சினையை ஏற்படுத்திய கொள்கலன் கொலன்னாவை எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எரிபொருள் பிரச்சனைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
டெர்மினல் அல்லது கிடங்கில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் போது முறையான தரப்படுத்தல் நடைமுறைகள் எப்போதும் பின்பற்றப்படுவதாகவும், தொடர்புடைய மாதிரிகள் தினமும் பரிசோதிக்கப்படுவதாகவும் சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம், என சிபெட்கோ விற்பனைப் பணியகம் தெரிவித்துள்ளது.
