‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியாகவுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தனது ‘செம்மொழி’ என்ற கதையைத் திருடி உருவாக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் போராட்டத்தை மையமாகக் கொண்ட இக்கதையை, தான் 2010லேயே பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் தனது கதையை முன்னதாக நடிகர் சூர்யாவிடம் தயாரிப்பாளர் ஊடாகக் கொடுத்ததாகவும், சூர்யா அதனை இயக்குநர் சுதா கொங்கராவிடம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ‘புறநானூறு’ என அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட படமே, தற்போது ‘பராசக்தி’ எனும் பெயரில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனது கதை திருடப்பட்டதால் பட வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இருப்பினும், மனுதாரர் கதைத் திருட்டு குறித்து எந்தவொரு ஆரம்பகட்ட ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனவும், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்குத் தடை விதித்தால் பாரிய நஷ்டம் ஏற்படும் எனவும் தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இரு தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, பராசக்தி படத்தின் தயாரிப்புப் பணிகள் குறித்து 2024லேயே தகவல் தெரிந்திருந்தும், 2025 டிசம்பர் மாதத்தில் (கடைசி நேரத்தில்) வழக்குத் தொடர்ந்ததால் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார்.

குறித்த விடயம் தொடர்பாக,இரண்டு கதைகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அதனைச் செய்யவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த ஆய்வு அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் சமர்ப்பிக்குமாறு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், திட்டமிட்டபடி எதிர்வரும் 10ஆம் திகதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் தற்போது சிக்கல் எதுவுமில்லை எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.