பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை

-கிரான் நிருபர்-

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சித்தாண்டியை சேர்ந்த கருணாகரன் சோபனன் குறித்த வழக்கிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று நகர்த்தல் பத்திரத்தின் மூலம் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த வழக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் சட்டத்தரணி ரணித்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி பி.ஜெயசிங்கம் ஆஜராகியிருந்தார்.

இவர் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள் தொடர்பான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 26.11.2020 ஆம் திகதி அன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து ஒரு வருடமும் 3 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 2022.01.27ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இருந்தபோதிலும் இவரது வழக்கு இன்றுவரை நடைபெற்று கொண்டே வந்தது இன்று இவ் வழக்கில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. அத்துடன் பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைத்து மூன்று மாதத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்