
பன்னூலாசிரியர் கவிஞர் அலறியின் “தந்தனக்கிளி” கவிதை நூல் வெளியீடு
-அம்பாறை நிருபர்-
பன்னூலாசிரியர், கவிஞர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி அலறி (ஏ.எல்.எம். றிபாஸ்) அவர்களால் எழுதப்பட்ட 08வது நூலான “தந்தனக்கிளி” கவிதை நூல் வெளியீட்டு விழா, புதுப்புனைவு வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
நூலின் அறிமுக உரையை ஆசிரியை மற்றும் கவிஞர் றியாசா எம். சவாஹிர் நிகழ்த்தியதுடன், நூலாய்வுரைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கவிஞர் கல்முனை ஜவாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளருமான எழுத்தாளர் மன்சூர் ஏ. காதிர், பேஜஸ் புத்தக நிலையத்தின் நிறுவுனரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இலக்கிய விமர்சகர் சிராஜ் மஸூர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர்,
கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். நிகழ்வை ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் தொகுத்து வழங்கியதுடன் அண்மையில் தேசிய விருதை பெற்றமைக்காக அதிதிகளினால் பொன்னாடை போத்தப்பட்டு பணப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.
கவிதை இலக்கியத்தில் புதிய அனுபவங்களையும் ஆழமான சமூகப் பார்வையையும் முன்வைக்கும் “தந்தனக்கிளி” நூல், இலக்கிய வாசகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என நிகழ்வில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
