பத்திரிகை அலுவலகத்திற்கு புகுந்து அடாவடி
-யாழ் நிருபர்-
யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனம் ஒன்றினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய குழு ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர்.
அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், போதகர், அவரது மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
அது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.
குறித்த செய்தி வெளியாகிய நிலையில், அச்சுவேலியில் இருந்து தமது சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து மற்றும் பட்டா வாகனம் என்பவற்றில் யாழ்.நகர் பகுதியில் உள்ள குறித்த பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்து, அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடவாடியில் ஈடுபட்டதுடன், நிறுவனத்தில் வேலை செய்தவர்களையும் தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு குறித்த பத்திரிகை நிறுவனத்தினர் அறிவித்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர முதல் குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதனை அடுத்து குறித்த பத்திரிகை நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்