ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் நோக்கி ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறி, ஆப்கானிஸ்தானுக்குள் 10 இடங்களில் விமான மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தாரர் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் பிரதேசத்திலிருந்து புதன்கிழமை ஏவப்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் வான் பாதுகாப்புப் படையினர் இலக்குகளை அடைவதற்கு முன்னரே கண்டறிந்து செயலிழக்கச் செய்ததாக கூறினார். இதையடுத்து, ட்ரோன்களை ஏவவும் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 10 இடங்கள் மீது “துல்லியமான” தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள பல பகுதிகளில் இடம்பெற்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கோஸ்ட் ஆளுநரின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் தங்கள் நாட்டில் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் ஆயுதக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பளிப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், தலிபான் நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இந்த மாதம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்திய தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.










