
பதவி விலக முன் நாட்டை விட்டு தப்பிசெல்ல ஜனாதிபதி திட்டம் : சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த வேளை இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக குறிப்பிட்டு சர்வதேச செய்தி சேவையான ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் (AFP) செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்று இரவு தங்கியிருந்ததாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாகவும், எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக ஏ.எப்.பி குறித்த செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளது.
இதேவேளை, அவர் விமான நிலையங்களின் ஊடாக தப்பிச்செல்லமுடியாத நிலையில், கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைத்தீவிற்கு செல்வதே தற்போதுள்ள வழியாகும், என பாதுகாப்பு தரப்பை சுட்டிக்காட்டி ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
