பதவி விலகிய பின்னரும் கோட்டாபயவின் அழுத்தம் நாட்டில் பிரயோகிக்கப்படுகிறதா?

-யாழ் நிருபர்-

முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னரும் அரசியல் பிரமுகர்களுக்கு அவரது அழுத்தம் – மக்கள் சந்தேகம்

முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதத்தினை சமூக ஊடகமான முகநூலில் பகிர்ந்த பின்னர் அந்தப் பதிவினை நீக்கியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9 ஆந் திகதி அன்று ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

இதனை அடுத்து ஜனாதிபதி மாளிகையை விட்டு தப்பித்துச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய புதன்கிழமை அன்று பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

பின்னர் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியேறிய கோட்டாபய மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலை தீவில் அவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், அவர் நேற்று வியாழக்கிழமை இரவு தனது பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகர் அவர்களுக்கு அனுப்பி இருந்தார்.

இவ்வாறு அனுப்பப்பட்ட பதவி விலக கடிதமே முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  முகநூல் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டிருந்தது.

இவ்வாறு பகிரப்பட்ட பதவி விலக கடிதமானது சிறிது நேரத்தின் பின்னர் அந்த சமூக ஊடத்திலிருந்து அவரால் நீக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னரும் நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மீது அவரது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.