பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும் இலங்கை ஆசிரியர் சேவைக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போதே பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன்  மாகாண ரீதியில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும்  ஆசிரியர்களின்  சம்பள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  பாடசாலை கட்டிடங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.