
பஞ்சசீலக் கொள்கைகளை கூறும் பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் பஞ்சமகா பாவங்களை செய்கின்றனர்: சிறிநேசன்
பஞ்சசீலக் கொள்கைகளை கூறுகின்ற பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் பஞ்சமகா பாவங்களை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில், சிவராத்திரி நாளில் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிரான அகிம்சைப் போராட்டம் இன்று ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பல்மதங்கள் காணப்படுகின்ற இந்த நாட்டில் ஒரு மதத்திற்கு மாத்திரம் அந்தஸ்து வழங்கி ஏனைய மதங்களை புறக்கணிக்கின்ற இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு நாட்டின் தலைவராக இருப்பாவர் இன நல்லிணக்கம், மத நல்லிணக்கம், காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறுகின்றார் ஆனால் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்பது போன்று சிவ வழிபாடுகள் நிந்தனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது இதற்குரிய தண்டனைகள் கிடைக்காமல் போகாது.
ஏற்கனவே செய்த குற்றங்களுக்காக இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இப்போது செய்கின்ற குற்றங்களுக்காக இன்னும் இந்த நாடு பாதிக்கப்படும் என்று கூறினார்.
இதேவேளை நாட்டில் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்றுகொண்டிருக்கிறது என சிவில் சமூக செயற்பாட்டாளர் சீலன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதி மன்றம் சிவன் ராத்திரி நிகழ்வை நடத்தலாம் என உத்தரவு வழங்கிய பின்பு சப்பாத்து கால்களுடன் உட்புகுந்த பொலிஸார் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.தொடர்ச்சியாக நீதி மன்ற உத்தரவை அவர்கள் மீறுகின்றார்கள்.
குருந்தூர் மலையில் கூட நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அங்கு எந்த கட்டடமும் கட்ட கூடாது என்று, ஆனால் அங்கு மிக பெரிய விகாரையை கட்டியுள்ளார்கள். மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினையில் 3 நீதி மன்றங்கள் தீர்ப்பு கூறியுள்ளது அங்கிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுமாறு எனினும் இது வரையில் அது நடக்கவில்லை அனைத்துமே நீதிமன்று பிறப்பித்த கட்டளைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற ஸ்ரீ லங்கா தேசத்தின் காவல் துறையினராக இவர்கள் செயற்படுகின்றனர் என அவர் கருத்து தெரிவித்தார்.
குறித்த ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





