
பங்களாதேஷில் தீக்கிரையான முன்னணி செய்தித்தாள் நிறுவனங்கள்!
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
அரசியல் ஆர்வலர் ஷெரிப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 32 வயதான ஷெரிப் ஒஸ்மான் ஹாடி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்கு வழிவகுத்த மாணவர் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராக இருந்தவர் ஆவார்.
டிசம்பர் 12இல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்த நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
டெய்லி ஸ்டார் செய்தித்தாளின் 28 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்தின் கூரையில் பல மணி நேரங்களாக சிக்கிக் கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகை காரணமாக அவர்கள் சுவாசிக்க சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இராணுவமும் தீயணைப்பு வீரர்களும் அவர்களை மீட்டுள்ளனர்.
இதன் விளைவாக, 35 ஆண்டுகளில் முதல் முறையாக, டெய்லி ஸ்டார் செய்தித்தாளின் அச்சிடப்பட்ட பதிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படவில்லை.
இந்தத் தாக்குதலில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், கட்டிடங்களின் பெரும் பகுதி எரிந்து நாசமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹாடியின் மரணத்தில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் நம்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
