பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு
பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனையடுத்து பங்களாதேஷில், பேராசிரியர் மொஹமட் யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதன்பின்னர், பெப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, பங்களாதேஷின் 13-வது தேசிய பாராளுமன்றில் பொது தேர்தல் கடந்த 12-ம் திகதி நடைபெற்றது.
அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், பங்களாதேஷின் தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றனர்.
அக்கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான அளவுக்கும் கூடுதலாக, மொத்தம் 212 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றுள்ளது.
இதனை தொடர்ந்து, பங்களாதேஷின் தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் அவருடைய புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
