நெருப்பில் காணாமல் போன எழுத்துக்கள் : மட்டு.வவுணதீவில் நூதனமான முறையில் மணல் கடத்தல்!

நெருப்பில் பிடித்தால் அழியும் மை கொண்ட பேனாவினால் அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றுள்ளது.

கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து எடுத்துச்செல்வது போல் பாசாங்கு செய்து மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கொழும்பில் இருந்து வந்த புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று வெள்ளிக்கிழமை பகல் கொழும்பில் இருந்து வந்த சோதனை பிரிவினர் வவுணதீவு பிரதேசத்தில் வீதியால் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி அனுமதிப்பத்திரத்தை சோதனை செய்தனர்.

இதன் போது பேனாவினால் நிரப்பப்பட்ட அந்த அனுமதி விண்ணப்ப படிவத்திற்கு மேலாக நெருப்பை பிடித்த போது பத்திரத்தில் எழுதியிருந்த எழுத்துக்கள் அழிந்தன.

அதன்படி அழியும் மை கொண்ட பேனாவால் நிரப்பப்பட்டு ஒரு உழவு இயந்திரத்திற்கு 6 போலி அனுமதி பத்திரத்தை பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மண் அகழ்ந்து அதனை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

அதேவேளை வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மணல் ஏற்றி சென்ற மற்றுமொரு உழவு இயந்திரத்தை நிறுத்தி சோதனையின் போது போலியாக தயாரித்த அனுமதிப்பத்திரம் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த சாரதியையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இரு உழவு இயந்திரங்களையும் எடுத்து சென்ற அதிகாரிகள் அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.