நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள் – பொலிஸார் விசேட அறிவுறுத்தல்
-நுவரெலியா நிருபர்-
தொடர் விடுமுறையையொட்டி நுவரெலியாவின் சுற்றுலாத் தலங்களை பார்வையீடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் .
குறிப்பாக முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி விழா வெள்ளிக்கிழமை என்பதாலும் சனி ஞாயிறு வார விடுமுறை என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கிரகரிவாவியிலும் அதன் கரையோரத்திலும் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விஷயங்களை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றன.
இதன்போது பொலிஸார் விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் நுவரெலியா நகருக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
இவ்வாறு வருவோர் காலை முதல் மாலை வரை பொழுதுகளை கழித்து இரவில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணங்களை தொடர்கின்றனர். இதனால் இரவில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது .
குறிப்பாக நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளில் செங்குத்தான வளைவுகள் மற்றும் அதிக பள்ளங்களையும் கொண்டுள்ளது இதனால் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
எனவே வீதி சட்ட ஒழுங்குகளை மீறுதல், மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களுடன் வாகனம் ஓட்டுவோர், உரிய அனுமதி இல்லாமல் வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுதல், தான்தோன்றித் தனமான வேகம் என்பவற்றால் விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது .
எனவே எதிர் காலங்களில் பரிதாப விபத்துக்களை தவிர்க்கப்பட வேண்டுமானால், இதனோடு சம்பந்தப்பட்ட சகலரதும் கூட்டிணைந்த ஒத்துழைப்புக்கள் அத்தியவசியமாகும் எனவும்,
வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமைக்கு சாரதிகளின் கவனயீனமே முக்கிய காரணமாக அமைகிறது.
இதில் சாரதிகள் வீதிபோக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்துவதே வாகன விபத்துக்களுக்கு காரணம் என தொடர்ச்சியாக பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன எனவே நுவரெலியாவிற்கு சுற்றுலா வரும் புதிய சாரதிகள் வீதிகளின் நிலையறிந்து அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என நுவரெலியா பொலிஸார் கேட்டுக்கொள்கிறனர்.