நுவரெலியாவிலுள்ள கிராமப்புற சாலைளை வருட இறுதிக்குள் மேம்படுத்த வேண்டும்

நுவரெலியாவில் சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவழித்து எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ. 350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஒதுக்கீட்டை முன்னுரிமை அடிப்படையில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல் அவசியம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சின் நுவரெலியா மாவட்டக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன் தலைவராக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.