நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி!

இந்தியாவின் சேலத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு நுழைவுச் சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் த.வெ.க தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

முதலில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், மனுவில் வரைபடம் இணைக்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளை பொலிஸ் எழுப்பியிருந்தது.

இதையடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பதிலாக, குறிப்பிட்ட திகதியில் த.வெ.க நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு த.வெ.க தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதையடுத்து, த.வெ.க நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் பொலிஸ் அனுமதி வழங்கியது.

முக்கிய நிபந்தனையாக அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று பொலிஸ் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், த.வெ.க. தலைமை நிலைய செயலகம் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை இன்று காலை வெளியிட்டுள்ளது.