நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது
நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு நீர்த்தேக்கமும் தற்போது வெள்ளப்பெருக்கு மட்டத்தில் இல்லை என அத்திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் கூடிய மழைவீழ்ச்சியாக 50-100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி சில பிரதான நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகியுள்ளது.
அதற்கமைய களனி, களு கங்கைகளை அண்மித்த பகுதிகளில் 50-100மில்லிமீற்றர் வரையான அளவும், கிங் கங்கை, நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் 50 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த மழைவீழ்ச்சி ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்வதற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மழைவீழ்ச்சி அல்ல எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்ப்பாசன முறைமைகளைக் கருத்தில் கொள்ளும்போது, 30 இற்கும் மேற்பட்ட பிரதான குளங்கள் வான் பாய்கின்றன அல்லது வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், வான் கதவுகளைத் திறந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தைக் குறைப்பதற்காக இராஜாங்கனை, தெதுறு ஓயா, நாச்சதுவ, சேனநாயக்க சமுத்திரம், வெஹெரகல மற்றும் லுனுகம்வெஹெர போன்ற நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், அந்நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் மட்டங்கள் (வெள்ளம் ஏற்படும் அளவுக்கு) உயரும் அளவிற்கு நீர் விடுவிக்கப்படவில்லை எனவும், கட்டுப்பாட்டுடன் எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு அதனை முகாமைத்துவம் செய்வதற்காகவே நீர் மட்டங்கள் குறைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வரும் சில நாட்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால், இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், எதிர்கால நிலைமைகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
