நிவாரண நிதிக்காக புதிய இணையத்தளம் அறிமுகம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக, நிதி உதவி வழங்குவதை இலகுபடுத்தும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உத்தியோகபூர்வ இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு “Stand With Sri Lanka” என பெயரிடப்பட்டுள்ளது.
https://donate.gov.lk/ அணுகுவதன் மூலம் நிவாரண நடவடிக்கைகளுக்காக, நிதி உதவி வழங்க முடியும் .

உலகளாவிய சமூகம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிரஜைகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவியை வழங்க முடியும்.

குறித்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், அனைத்து நிதிப் பங்களிப்புகளையும் பாதுகாப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செலுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளன.

அனைத்து நிதிப் பங்களிப்புகள் குறித்த சரியான தகவல்களும், கணக்கு விபரங்களும் இந்த இணையத்தளத்தில் உள்ளிடப்பட்டுள்ளன.

இந்த நிதிப் பங்களிப்புகளில் 100 சதவீதமானவை பின்வரும் அரசாங்கத்தின் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல்,நோய் பரவலைத் தடுக்க சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல்,காயமடைந்தவர்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்குதல்,எல்லாவற்றையும் இழந்தவர்களுக்குத் தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் நிவாரணப் பொதிகளை வழங்குதல்.