நிலவும் சீரற்ற வானிலையால் 8 மாவட்டங்கள் பாதிப்பு
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துக்களைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், பதுளை, கேகாலை, புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் 3,511 குடும்பங்களைச் சேர்ந்த 12,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 77 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 302 பேர் தற்காலிக முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
