நிர்வாக முடக்கல் போராட்டம்: தமிழரசு கட்சி பிரித்தானிய கிளை கண்டனம்

வடக்கு–கிழக்கில் நாளை நடத்தப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தாங்கள் எந்தவித ஆதரவும் வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை அறிவித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது .

முத்தையன்கட்டு பகுதியில் உயிரிழந்த குடும்பஸ்தருக்கான நீதி கோரி, நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கான அழைப்பானது, முறையான நடைமுறைகள், கட்சியின் உட்புற ஆலோசனைகள் மற்றும் பொது அமைப்புகளுடனான கலந்துரையாடல்கள் எதுவும் இன்றி விடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பை விடுத்திருப்பதோடு, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஊடகச் சந்திப்புகள், வர்த்தக சங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தியிருப்பது கட்சியின் கண்ணியத்தை களங்கப்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் வடக்கு கிழக்குக்குள் தமிழர்கள் மாத்திரமே மேற்கொள்ளும் நிர்வாக முடக்கல், இலங்கை அரசுக்கு எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்தாது என்றும் மாறாக, அது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், தினக்கூலி தொழிலாளர்களையும், வணிக நிறுவனங்களையும் பாதிக்கும் என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய தன்னிச்சையான, சர்வாதிகார செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை வலியுறுத்தியுள்ளது.