
நின்று போன சிறுமியின் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்த வைத்தியர்!
இந்தியா-தமிழ்நாடு திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பிள்ளையின் நின்று போன இதயத்தை ஷாக் ட்ரீட்மென்ட் மூலம் துடிக்க வைத்து பிள்ளையை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளுர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் தீபிகா. இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தேங்கியிருந்த மழை நீரில் காலை வைத்துள்ளார்.
அப்போது மின்கம்ப வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டு அந்த நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், பிள்ளைக்கு மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், பிள்ளையை அந்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர். நாடித்துடிப்பு இல்லாத நிலையில் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பதறி அடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நெஞ்சை கடுமையாக அமுக்கி சுவாசம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.ஆனாலும் பிள்ளை சலனமற்று கிடந்ததால். டிஃபிபிரிலேட்டர் கருவியின் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டது.
03 முறை ஷாக் கொடுக்கப்பட்டும் பிள்ளையின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்தனர். ஆனாலும், மருத்துவர் சரவணன் நம்பிக்கை தளராமல் 4, 5-வது முறை தொடர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென அந்த அதிசயம் நிகழ்ந்தது. பிள்ளை மூச்சு விட ஆரம்பித்துள்ளார்.
இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினர்.அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பிள்ளையின் நின்றுப்போன இதயத்தை துடிக்க வைத்த அரசு மருத்துவக் குழுவினருக்கு பெற்றோர், உறவினர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
