நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதி கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் தற்போது வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான

மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாட்டுக் குழுவினர் தயாராகி வருகின்றனர். எனினும் கடந்த இரு வருடங்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்திருந்தது.வடக்கு கிழக்கின் பல இடங்களில் நீதிமன்றங்கள் ஊடாக இந்தத் தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடங்கல் எதுவும் ஏற்படுமா என்பது தொடர்பில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.