
நிதி நெருக்கடியை சமாளிக்க இலங்கையர்கள் நாடும் வழி
வெளிநாடுகளில் செயற்படும் பல வயது வந்தோருக்கான இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் பணச் சலுகைகளை வழங்குவதால், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இணையவழி பாலியல் உள்ளடக்க தயாரிப்பை நாடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக இளம் தம்பதியினர், தங்கள் அடையாளங்கள் மறைக்கப்பட்டு, இத்தகைய நடவடிக்கைகளை வீட்டிலிருந்தே இரகசியமாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இணையத்தில் பாலியல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது, தயாரிப்பது அல்லது விநியோகிப்பது இலங்கையில் சட்டவிரோதமானது என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்
முன்னதாக இத்தகைய சம்பவம் தொடர்பில் திருமணமான தம்பதியினர் இருவர் நுகேகொடை பிரிவுக்குரிய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
கணவர் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் பட்டதாரி என்றும், மனைவி மற்றொரு தனியார் நிறுவனத்தில் மனோதத்துவவியலில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் வேலையை இழந்த பின்னரும், நிதி நெருக்கடியைச் சந்தித்த பின்னருமே பாலியல் உள்ளடக்கத் தயாரிப்பை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த தம்பதியினர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளிநாட்டு இணையத்தளத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதன்படி அவர்கள் மாதத்திற்கு 8 காணொளிகளை வழங்க வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இணையத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது ஒரு குற்றமாகும் என்று இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
