
நாளை முதல் மக்கள் பார்வைக்கு பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை!
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜஷீராவுக்கு வழங்கிய நேர்காணலின் போது பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என அறிவித்திருந்தார்
1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மீது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம், பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை விசாரிக்க ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார்.
ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், அதனுடன் தொடர்புடைய அறிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி வழங்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கம் அந்த அறிக்கை தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.