நாமலுக்கு கிடைத்த வாய்ப்பை இல்லாமல் செய்த புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்!

கேம்பிரிட்ஜ் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாத இறுதியில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒக்ஸ்போர்ட் ஒன்றியம் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியம்(Cambridge Union) ஆகிய மாணவர் சங்கங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக பிரித்தானிய வாழ் தமிழ் புலம்பெயர் அமைப்புகளும், ஆதரவாளர்களும் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை இணைந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தன.

அதில், நாமல் ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட இந்த எதிர்ப்புகளின் விளைவாக, கேம்பிரிட்ஜ் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தரப்பில் எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது