Last updated on August 6th, 2023 at 03:33 pm

நாமலின் திருமண வைபவத்திற்காக விநியோகித்த மின்சாரம் தொடர்பில் சர்ச்சை

நாமலின் திருமண வைபவத்திற்காக விநியோகித்த மின்சாரம் தொடர்பில் சர்ச்சை

 

மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை மின்சார சபையிடம் விளக்கம் கோரியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் குறித்த துல்லியமான விவரங்களைத் தமக்கு வழங்குமாறும், அது உண்மையான ஆவணமாக இருந்தால் அதற்குத் தகுந்த பதிலை அளிப்பதாக இலங்கை மின்சார சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்திருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

2019 ஆண்டு ஒன்பதாம் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரகெட்டிய வீட்டில் நடந்த திருமண வைபவத்திற்கு வழங்கிய தற்காலிக மின் விநியோகத்திற்காக 26,82,246.57 ரூபா செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

“இலங்கை மின்சார சபை அவ்வாறான எந்தவொரு மின் கட்டண பட்டியலையும் எங்களுக்கு இதுவரை அனுப்பவில்லை. மின் கட்டணப் பட்டியல் எப்போது அனுப்பப்பட்டது என்பதை அறிவிக்குமாறு கோரியுள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் எனது செயலாளர் மூலம் மின்சார சபைக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன். இது நாள் வரைக்கும் எனக்கும் என் தந்தையின் பெயருக்கும் இவ்வாறான மின் கட்டணப் பட்டியல் வந்ததில்லை.

இது குறித்து இலங்கை மின்சார சபையிடம் விளக்கம் கோரியுள்ளேன். அதற்கு பதில் வந்த பின்னர் இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை” எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்