நான் ராஜபக்சக்களை பாதுகாக்க முற்படவில்லை, நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்தேன்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தம் தொடர்பில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே ஆனால் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை.

விமானப்படையின் சில உறுப்பினர்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தினர், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான தாக்குதல்கள் பெருவாரியாக இடம்பெற்றதாக நான் கருதவில்லை, அதேநேரம் நாட்டில் எந்த சமூகத்துக்கும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை, என்று அவர் தெரிவித்தார்.

ராஜபக்ச சகோதரர்களை பாதுகாத்தமை மற்றும் ஊழல்வாதிகளுக்கு துணை போனமை தொடர்பில் வினவப்பட்ட போது,

தாம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ, ஏனைய ராஜபக்சக்களையோ பாதுகாக்க முற்படவில்லை எனவும், நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்த போது, தாம் அதனை மீட்க நடவடிக்கை எடுத்ததாகவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யுத்தக் குற்றவாளி என்று அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்த சவேந்திரசில்வாவை பதவி வழங்கி அலங்கரித்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, அந்த பதவிக்குப் பொருத்தமானவர் என்பதாலேயே அவரை இராணுவத்தளபதியாக நியமித்ததாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்