“நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்” – முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்!

தனது உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து  வெளியேற தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும், அல்லது அதற்க்கு மாதாந்த வாடகை தர வேண்டும், என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்த கருத்துக்கு,  (மஹிந்த ராஜபக்ஷ மாதம் 4.6 மில்லியன் ரூபா வாடகை தர வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும்!) பதில் அளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்க வேண்டும், என  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே எனக்கு உத்தியோகபூர்வ இல்லம்  வழங்கப்பட்டது,  முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள், அரசமைப்பின் கீழ் எனக்கு அதற்கான உரிமையுள்ளது

நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால், நான் அங்கிருந்து வெளியேற தயார்,  நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்து வைத்திருக்கவில்லை, அங்கிருந்து வெளியேற தயார்

அனுரகுமாரதிசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போல நடந்து கொள்கின்றார்

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும், தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை போல மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உகந்தவை அல்ல

எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன், என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்