நாட்டை விட்டு வெளியேறினார் பசில் ராஜபக்ஷ
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை அமெரிக்கா பயணமாகியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்று காலை 10.06 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 651 விமானம் மூலம் டுபாய் சென்றுள்ளார். அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜூலை 9 ஆம் திகதி மக்கள் எழுச்சி காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயன்றார், அப்போது விமான நிலையத்திலும் குடிவரவுத் திணைக்களத்திலும் பயணிகளின் எதிர்ப்பு காரணமாக அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
அதனையடுத்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ச, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
அண்மையில் நீதிமன்றம் குறித்த பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்தியது.
வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளல் உட்பட தனிப்பட்ட காரணங்களால், அமெரிக்காவுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளமையால், அதற்காக அனுமதி வழங்குமாறு, பசில் ராஜபக்ஷ சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையாகிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இதனைப் பரிசீலனைக்கு எடுத்த பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர்கொண்ட நீதியரசர்கள் குழு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
